திருக்குறள்-இல்வாழ்க்கை



  • குறள் பால்   :- அறத்துப்பால்.
  • குறள் இயல்:-  இல்லறவியல்.
  • அதிகாரம்    :- இல்வாழ்க்கை.
  • திருக்குறள்  :- 41-50.  

திருக்குறள்  41:- 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை.

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

திருக்குறள்  42:- 

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை.

துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

திருக்குறள்  43:- 

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

திருக்குறள்  44:- 

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

திருக்குறள்  45:-

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது.

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

திருக்குறள் 46:-

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 
போஒய்ப் பெறுவ தெவன்.

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

திருக்குறள் 47:-

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை.

அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

திருக்குறள் 48:-

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து.

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை  தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

திருக்குறள் 49:-

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

திருக்குறள் 50:-

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக